இந்தியா-குவைத் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதன், 8 ஏப்ரல் 2009 (10:51 IST)
கல்வி, கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா-குவைத் இடையே பரஸ்பர பங்களிப்பை மேம்படுத்துவதற்காக இரு நாடுகளிடையே 3 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதன்படி அறிவியல்துறை ஒத்துழைப்பிற்காக இந்திய-குவைத் கூட்டு குழு உருவாக்கப்படும் என்றும், அக்குழு ஆண்டுதோறும் ஒருமுறை கூடி விவாதிம் நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இந்த ஒப்பந்தத்தின் கீழ் விஞ்ஞானிகள் மற்றும் தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

குவைத் நாட்டிற்கு 3 நாள் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி முன்னிலையில், மேற்கூறிய 3 ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

கல்வித் துறையில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் கீழ், புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பயிற்றுவிக்க உதவும் குறிப்புகள் ஆகியவையும் பரிமாறிக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இருநாட்டு மாணவர்களுக்கும், இந்தியா, குவைத் நாட்டின் வரலாறு, புவியியல் தன்மை மற்றும் பாரம்பரியம் குறித்தும் பயிற்றுவிக்கப்பட உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்