காவல்துறை பயிற்சி மையத்தில் துப்பாக்கிச்சூடு: பாகிஸ்தானில் 20 காவலர் பலி
திங்கள், 30 மார்ச் 2009 (11:51 IST)
பாகிஸ்தானின் வாகா எல்லைப் பகுதிக்கு அருகே செயல்பட்டு வரும் காவல்துறை பயிற்சி மையத்திற்குள் இன்று காலை புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 20 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பயிற்சிப் மையத்தில் இருந்த சுமார் 800க்கும் அதிகமான காவலர்களை பயங்கரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகா எல்லைப் பகுதிக்கு அருகே மனாவான் பகுதியில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி மையத்தில் இன்று காலை 7 மணியளவில் காவலர்கள் போல் உடையணிந்த சுமார் 10 முதல் 14 பேர் கொண்ட கும்பல் அதிரடியாக நுழைந்து கையெறி குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தியதாக அந்நாட்டுத் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாக்குதலில் குறைந்தது 20 காவலர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும், 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.