பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு படையினர்-பிரிவினைவாதிகள் மோதல்: 27 பேர் பலி

சனி, 28 மார்ச் 2009 (11:23 IST)
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், முஸ்லிம் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 20 பிரிவினைவாதிகள், 7 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் அதிபராக இருப்பவர் குளோரியா அர்ரோயா. இவர் அந்நாட்டின் மமசபனோ பகுதியில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

குளோரியாவின் சுற்றுப்பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மோரோ இஸ்லாமிக் விடுதலை முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த 60 பேர் கொண்ட கும்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களைத் நேற்று முன்தினம் தாக்கியது.

இதையடுத்து நேற்று மமசபனோவுக்கு குளோரியா சென்றார். இதன் காரணமாக முஸ்லிம் பிரிவினைவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 20 பிரிவினைவாதிகள், 7 படையினர் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் போன்ஸ் இன்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்