இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'ஸ்லம் டாக் மில்லியனர்' திரைப்படம் மொத்தம் 8 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது.
உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை தொடங்கி, நடைபெற்று வருகிறது.
இதில், முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்திய தொழில்நுட்பக் கலைஞர்கள் பெருமளவில் பங்கேற்ற 'ஸ்லம் டாக் மில்லியனர்' திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை (சவுண்ட் மிக்சிங்) மற்றும் சிறந்த படத்தொகுப்பு (எடிட்டிங்), சிறந்த இயக்குனர், சிறந்த இசை, சிறந்த பாடல் மற்றும் சிறந்த படம் ஆகிய 8 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த திரைக்கதைக்கான விருதை சிமோன் பியூபோய் பெற்றுள்ளார்.
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ஆன்டணி டாட் மன்லே வென்றுள்ளார்.
சிறந்த ஒலித் தொகுப்புக்கான விருது ரேசுல் பூக்குட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த படத்தொகுப்புக்கான விருதையும் 'ஸ்லம் டாக் மில்லியனர்' பெற்றுள்ளது.
சிறந்த இயக்குனருக்கான விருதை டேனி பாயல் பெற்றுள்ளார்.
சிறந்த இசையமைப்பு மற்றும் சிறந்த பாடல் ஆகிய இரண்டு விருதுகளையும், தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான் பெற்றுள்ளார்.
இதுதவிர, சிறந்த படத்துக்கான விருதையும் 'ஸ்லம் டாக் மில்லியனர்' படம் வென்றுள்ளது.
இப்படம், மொத்தம் பரிந்துரை செய்யப்பட்டிருந்த 10 பிரிவுகளில், இதுவரை 8 விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது,
இதன் மூலம் 81வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் அதிக விருதுகளை பெற்ற படம் என்ற பெருமையையும் 'ஸ்லம் டாக் மில்லியனர்' பெறுகிறது.
ஆஸ்கார் விருதுகள் பட்டியல் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.