டாக்கா: பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒருநாள் பயணமாக இன்று வங்கதேசம் சென்றுள்ளார்.
அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா, அயலுறவு அமைச்சர் டிபு மோனி, உள்துறை அமைச்சர் சஹாரா காதும் ஆகியோரை பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேச உள்ளார்.
இன்று காலை டாக்காவில் உள்ள ஜியா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட இதர முக்கிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் தமது பயணத் திட்டம் அமைந்துள்ளதாக கூறினார்.
பிரணாப் முகர்ஜியின் இப்பயணத்தில், வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவது உள்ளிட்ட 2 ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக கூட்டுப்படை ஒன்றை உருவாக்குவது பற்றியும் இருதரப்பினரும் விவாதிப்பார்கள் எனத் தெரிகிறது.