பாக். அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான் விடுதலை: இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (14:03 IST)
வடகொரியா, ஈரான், சூடான் ஆகிய நாடுகளுக்கு அணு சக்தி தொழில்நுட்பத்தை ரகசியமாக விற்பனை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாற்றின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான், குற்றமற்றவர் என்று அறிவித்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
விஞ்ஞானி அப்துல் காதிர் கான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு மனுக்கள் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவற்றை விசாரித்த நீதிபதி சர்தார் முகமது அஸ்லாம் இன்று அளித்துள்ள தீர்ப்பில், பிற நாட்டிற்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை விற்பனை செய்ய முயன்றதாக விஞ்ஞானி அப்துல் காதிர் கான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாற்றுகள் முறையாக நிரூபிக்கப்படாத காரணத்தால் அவரை வீட்டுக்காவலில் இருந்து விடுவிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், அவர் நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் செல்ல அவருக்கு அனுமதி உள்ளது என்றாலும், அணு விஞ்ஞானி என்ற முறையில் பாதுகாப்பு காரணங்களுக்காக தாம் செல்லும் இடத்தைப் பற்றிய தகவல்களை முன்கூட்டியே அரசுக்கு தெரிவித்து விட வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், விஞ்ஞானி அப்துல் காதிர் கானுக்கு உடனடியாக வி.வி.ஐ.பி. பிரிவுக்கான பாதுகாப்பை வழங்கவும் நீதிபதி முகமது அஸ்லாம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் அணு ஆயுதத் தந்தையாகக் கருதப்பட்ட விஞ்ஞானி அப்துல் காதிர் கான், அந்நாட்டின் அணுசக்தி தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு விற்க முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாற்றின் பேரில் கடந்த முஷாரஃப் ஆட்சிக் காலத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.