பெர்லினில் கண்டனப் பேரணி: 15,000 தமிழர்கள் பங்கேற்பு
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (15:00 IST)
இலங்கையில் தமிழினப் படுகொலை நடத்தி வரும் சிறிலங்க அரசு தனது தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும், ராணுவ ஆக்கிரமிப்பிற்குள் சிக்கியிருக்கும் மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் கிடைக்க ஜெர்மன் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜெர்மன் தலைநகர் பெர்லினில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்பட்டது.
இதில் ஜெர்மனி வாழ் தமிழர்கள் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
PUTHINAM
பெர்லினில் உள்ள ஜெர்மனி ஆளும் கட்சியின் அலுவலகத்தின் முன்பாக புதன்கிழமை காலை 9 மணி தொடக்கம் தமிழ் மக்கள் குவியத் துவங்கினர். பிற்பகல் ஒரு மணியளவில் ஜெர்மனி நாடளுமன்றம் நோக்கி பேரணி சென்ற தமிழர்கள், நார்வே மற்றும் ஸ்காண்டினேவியா நாடுகளுக்கான மனுக்களை நார்வே தூதரகத்தில் அளித்து விட்டு பேரணியாக இந்திய தூதரகம் நோக்கி பேரணி சென்றனர்.
இந்திய தூதரகம் முன்பாக சிறிது நேரம் நின்ற மக்கள், இந்திய தூதுவரிடமும் மனுவொன்றை அளித்து விட்டு சென்றனர். மக்கள் பேரணியாக முழக்கங்களை எழுப்பிய வண்ணம் நிற்க, ஜெர்மனிய அதிபருக்கான மனு அவரது செயலாளரிடம் அளிக்கப்பட்டது.
இப்பேரணிக்கு ஜெர்மனியின் பல பகுதிகளில் இருந்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.