சுவிசின் இராஜதந்திரத் தலைநகரான ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் அவை வளாகத்தில், 'அழிக்க நினைத்தால் அலை கடலாக எழுவோம்' என்ற முழக்கத்துடன் நடந்த முற்றுகையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டு சிங்கள அரசின் 61 ஆவது சுதந்திர நாளினை தமிழரின் கறுப்பு நாளாய் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
மேலும், ஜக்கிய நாடுகள் அவை அலுவலகத்திற்குச் செல்லும் முக்கியச் சாலைகளில் அமர்ந்தவாறு தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை முற்றுகை, சாலை மறியல் போராட்டங்களை நிறுத்த மாட்டோம் என்று முழக்கமிட்டவாறு தொடர் போராட்டத்தை நடத்தினர்.
இதையடுத்து, ஜக்கிய நாடுகள் அவையின் உயரதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தமிழ் மக்களிடம் வாக்குறுதி தந்ததை அடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால், ஜெனீவா நகரம் பல மணி நேரம் செயலிழந்திருந்தது ஓரு வரலாற்றுப் பதிவாகியுள்ளது.
நார்வேயில் மாபெரும் தீப்பந்தப் பேரணி
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும், தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும், நார்வே உட்பட்ட இணைத் தலைமை நாடுகளின் நீதியற்ற நடவடிக்கையைக் கண்டித்தும் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் மாபெரும் தீப்பந்தப் பேரணி நடைபெற்றது.
கடும் பனித் தூறலுக்கும் குளிருக்கும் மத்தியிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நார்வே வாழ் தமிழர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
PUTHINAM
ஒஸ்லோ Youngstorget-இலிருந்து நேற்று புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு தொடங்கிய பேரணி, நார்வே நாடாளுமன்றத்தைச் சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டத்துடன் இரவு 8:00 மணிக்கு நிறைவடைந்தது.
நார்வே பிரதான கட்சிகளில் ஒன்றான வலதுசாரிக் கட்சியின் தலைவர் அர்ணா சூல்பர்க், தொழிற்கட்சியின் முக்கிய உறுப்பினரும் ஒஸ்லோ நகரசபை உறுப்பினருமான துறொண்ட் ஜென்ஸ்ரூட், நார்வேஜிய தொழிற்சங்க ஒஸ்லோ பிரதேச துணைத்தலைவர் ஆர்ண ஹாலோஸ் மற்றும் செங்கட்சியைச் சேர்ந்த விஜொணார் மொக்ஸ்னஸ் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கக் கோரிய இணைத் தலைமை நாடுகளின் நிலைப்பாடு மீது கண்டனமும் எழுப்பப்பட்டது.