இலங்கையில் உடனடிப் போர்நிறுத்தம்: அமெரிக்கா, இங்கிலாந்து வேண்டுகோள்

புதன், 4 பிப்ரவரி 2009 (17:08 IST)
இலங்கையில் தற்போதுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் விடுதலைப்புலிகள், சிறிலங்க ராணுவம் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

அமெரிக்கா வந்த இங்கிலாந்து அயலுறவு அமைச்சர் டேவிட் மிலிபந்த், அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை நேற்று சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

அதில், அமைதித் தீர்வு காண்பதற்கு அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தையைத் துவக்க இதுவே சரியான தருணம் எனத் தெரிவித்துள்ளனர்.

போர் நடைபெறும் பகுதியில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் காயமடைந்தவர்களை அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக தமிழீழ விடுதலைப்புலிகளும், சிறிலங்க ராணுவமும் அனுமதிக்க வேண்டும்.

மக்கள் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்ற விடயத்தில் கொடை நாடுகள் வலியுறுத்தியுள்ளதை தாங்கள் ஆதரிப்பதாக இரு அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.

போர் பகுதியில் சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருத்துவ உதவிகளை கிடைக்கச் செய்வதற்கு இரு தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதுடன் காயமடைந்தவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், இதர தொண்டு அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தடை விளைவிக்கக் கூடாது என வலியுறுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்