தமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்: புலிகள் குற்றச்சாற்று
வெள்ளி, 30 ஜனவரி 2009 (17:34 IST)
48 மணி நேர போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டு இன்றும் வழமைபோல பொதுமக்கள் மீதும், சந்தைகள், மருத்துவமனைகள் மீதும், தொண்டு நிறுவனங்கள் மீதும் கண்மூடித்தனமாக சிறிலங்க இராணுவம் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றம் சாற்றியுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வருவதற்காக 48 மணி நேர போர் நிறுத்தத்தை சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்தார்.
Puthinam Photo
FILE
ஆனால் இந்த போர் நிறுத்த அறிவிப்பு, தமிழகத்தையும், உலகையும் ஏமாற்ற சிறிலங்க அரசு நடத்தும் நாடகம் என்று குற்றம் சாற்றியுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் ப. நடேசன், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டப் பின்னர் சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 60க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இன்னமும் தங்களது கண்மூடித்தனமாக பீரங்கித் தாக்குதலை சிறிலங்க இராணுவத்தினர் நிறுத்தவில்லை என்று கூறியுள்ள நடேசன், “சிறிலங்க அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது உலகத்தை ஏமாற்றுவதற்கும் தமிழகத்தின் ஏழு கோடி தொப்புள் கொடி உறவுகளின் எழுச்சியை மழுங்கடிப்பதற்கான சூழ்ச்சியின் வெளிப்பாடே” என்று கூறியுள்ளார்.
நிரந்தர போர் நிறுத்தத்திற்குத் தயார்!
உடையார்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள உலக கத்தோலிக்க திருச்சபையின் தொண்டு நிறுவனமான கியூடெக் நிறுவனத்தின் மீதும், புதுக்குடியிருப்பு பகுதியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைத்துள்ள மருத்துவமனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பீரங்கித் தாக்குதல்களைத் தொடர்ந்த வண்ணம் உள்ளதென கூறியுள்ளார்.
“அனைத்துலக சமூகத்தின் ஒத்துழைப்போடு ஏற்படுத்தப்படுகின்ற நிரந்தரமான போர் நிறுத்தமும் அதனுடன் கூடிய அரசியல் பேச்சுவார்த்தையுமே தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்குத் தீர்வினை ஏற்படுத்தும் என்று தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் நம்புகின்றனர் என்று தனது அறிக்கையில் ப. நடேசன் தெரிவித்துள்ளார்.