பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாக். சமமாக நடத்தப்படவில்லை: முஷாரப்
சனி, 24 ஜனவரி 2009 (11:40 IST)
உலகளவில் நடத்தப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், சர்வதேச அளவில் சமமாக நடத்தப்படாதது வேதனை அளிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முஷாரஃப், சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் பாரபட்சமாக நடத்தப்பட்டுவது அந்நாட்டுத் தலைவர்களையும், அரசையும், மக்களையும் வருத்தப்பட வைக்கிறது என்றார்.
ஏவுகணைத் தாக்குதல் சரியல்ல: இதற்கிடையில், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதல் முறையானது அல்ல என்றும் முஷாரஃப் கண்டித்துள்ளார்.
இத்தாக்குதல் காரணமாக பாகிஸ்தானில் ஒருவருக்கும் நிம்மதி கிடைப்பதில்லை. இதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இப்பிரச்சனையில் பாகிஸ்தான் மக்களின் கருத்து எதிரானதாகவே உள்ளது என்றார்.