தமிழீழத்தை அங்கீகரிக்க கோரி இந்தியத் தூதரகம் முன் அமெரிக்கத் தமிழர்கள் பேரணி
சனி, 24 ஜனவரி 2009 (13:25 IST)
இலங்கையில் தமிழீழத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக அமெரிக்க தமிழர்கள் நேற்று அமைதிப் பேரணி நடத்தியுள்ளனர். தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்துமாறும் இந்தியாவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Puthinam Photo
PUTHINAM
இப்பேரணியில் இலங்கைத் தமிழர்கள், மலேசியா, சிங்கப்பூர், தென்ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தமிழர்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்க இந்திய தூதரகத்தின் அதிகாரியான ராகுல் ராஸ்கோத்ரா பேரணியில் பங்கேற்ற அமெரிக்க தமிழர் பிரதிநிதிகளுடன் உரையாற்றினார். தனது கருத்தாக எதனையும் அவர் தெரிவிக்காத போதிலும், சொல்லப்பட்ட கருத்துக்களை அவர் பொறுமையாக கேட்டுக் கொண்டார்.
சிறிலங்க அரசு எப்போதும் இந்தியாவின் நண்பனாக இருந்ததில்லை. அது ஒரு சந்தர்ப்பவாத நாடு. இந்தியா-பாகிஸ்தான் போர்க் காலத்தில், பாகிஸ்தான் வான்படைக்கு எண்ணெய் நிரப்பும் தளமாக சிறிலங்கா அன்று செயல்பட்டது.
இப்போதும் அது பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் இராணுவ உறவுகளைப் தொடர்கிறது. அதே நேரம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் உதவியையும் பெறுகின்றது. இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என்ற நிலை வரும் போது சிறிலங்க அரசு பாகிஸ்தான் மற்றும் சீனா பக்கமே போகும். ஆனால், தமிழர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என அமெரிக்க தமிழர் பிரதிநிதிகள் ராகுல் ராஸ்கோத்ராவிடம் விளக்கிக் கூறினர்.
எனவே, தமிழீழம் அமைவதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு எப்போதும் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில்தமிழர்கள் எப்போதுமே இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை.
இந்தியாவின் தெற்கில் ஒரு பெரும் காப்பு அரணாக தமிழீழம் எப்போதுமே இருக்கும். அதனால் தமிழீழப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றும் அமெரிக்க தமிழர் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளதாக விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளமான புதினம் தெரிவிக்கிறது.