வன்னியில் மீண்டும் எறிகணைத் தாக்குதல்: 22 பேர் பலி
வியாழன், 22 ஜனவரி 2009 (20:50 IST)
இலங்கையின் வன்னி பகுதியில் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கென சிறிலங்க அரசு நேற்று அறிவித்த ‘புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்’ மீது இன்று சிறிலங்க படைகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் வன்னி பகுதியில் மட்டும் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.
சிறிலங்க அரசு அறிவித்த புதுக்குடியிருப்பின் மீது இன்று காலை 7.55 மணியளவில் சிறிலங்க படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை நடத்தியதாகவும், இதில் இடம்பெயர்ந்து வீதியோரம் தங்கியிருந்தவர்களில் 22 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாகவும், 103க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளமான புதினம் தெரிவித்துள்ளது.
பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த வீட்டின் மீது நேற்றிரவு 11.30 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.