மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்தார் பராக் ஒபாமா

வியாழன், 22 ஜனவரி 2009 (11:50 IST)
கேபிடல் ஹில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த அதிபர் பதவியேற்பு விழாவில் எடுக்கப்பட்ட உறுதிமொழியின் போது சில வார்த்தைகள் சரியாக உச்சரிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் பராக் ஒபாமா மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் (இந்திய நேரப்படி) அமெரிக்காவின் 44வது அதிபராக ஒபாமா பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அன்றைய பதவிப்பிரமாணத்தின் போது அதிபர் ஒபாமா, ஜான் ராபர்ட்ஸ் இருவருமே சில வார்த்தைகளை சரியாக உச்சரிக்கவில்லை என அந்நாட்டு சட்ட வல்லுனர்கள் சர்ச்சையை எழுப்பினர்.

இதையடுத்து தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் நேற்று வெள்ளை மாளிகைக்கு வரவழைக்கப்பட்டதாகவும், அங்கு ஒபாமாவுக்கு அவர் 2வது முறையாக பதவிப்பிரமாணம் செய்து வைத்ததாகவும் வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்