மும்பை தாக்குதல் புலனாய்வு: சர்வதேசத் தூதர்களிடம் பாகிஸ்தான் விளக்கம்

திங்கள், 19 ஜனவரி 2009 (14:07 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட புலனாய்வுகள் பற்றியும், இந்தியா வழங்கிய ஆதாரத்தின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேசத் தூதர்களிடம் பாகிஸ்தான் இன்று விளக்கியது.

இஸ்லாமாபாத்தில் இன்று நடந்த தூதர்கள் சந்திப்பில் அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, உள்துறை ஆலோசகர் ரெஹ்மான் மாலிக் ஆகியோர் இஸ்லாமாபாத்தில் உள்ள தூதர்களிடம் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட தகவல்கள் பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், மும்பை தாக்குதலைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் தடைவிதிக்கப்பட்ட ஜமாத்-உத்-தாவா, லஷ்கர்-ஈ-தயீபா ஆகிய அமைப்புகள் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி குரேஷி விளக்கியிருப்பார் என அந்நாட்டு தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய தூதருக்கு அழைப்பு இல்லை: இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்தியத் தூதரிடம் இதுதொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு விட்டதால், அவருக்கு இன்று பாகிஸ்தான் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்