முல்லைத் தீவின் மீது சிறிலங்க இராணுவம் பீரங்கித் தாக்குதல்

சனி, 17 ஜனவரி 2009 (20:17 IST)
முல்லைத் தீவு மாவட்டத்திலும், அதன் மையப் பகுதியாக விளங்கும் புதுக்குடியிருப்பு நகரத்தையும் குறிவைத்து சிறிலங்க இராணுவம் பீரங்கிகளாலும், எரிகணைகளாலும் கடும் தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கிளிநொச்சி வீழ்ந்ததையடுத்து அங்கிருந்து இடம்பெயரும் மக்கள் முல்லைத் தீவு மாவட்டத்திற்குள் தஞ்சமடையதுள்ளனர். இதனால் அங்கு பெரும் மக்கள் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், முல்லைத் தீவை குறிவைத்து தாக்குதல் நடத்தும் சிறிலங்க இராணுவம், சகட்டுமேனிக்கு பீரங்கியால் சுட்டும், எரிகணைகளை வீசியும், பல்குழல் பீரங்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தி வருவதாக ஈழச் செய்திகளைத் தரும் தமிழ்நெட்.காம் செய்தியையும், படங்களையும் வெளியிட்டுள்ளது.

முல்லைத் தீவுப் பகுதியில் மக்கள் அதிகம் வாழும் புதுக்குடியிருப்பு மீதுதான் இராணுவத் தாக்குதல் அதிகப்படியாக நடப்பதாகவும், பள்ளிகள், மருத்துவமனைகள் என்று எல்லா இடத்திலும் குண்டுகள் விழுந்து வெடிப்பதாகவும் அச்செய்தி கூறுகிறது.

முல்லைத் தீவையும், வடமராச்சியையும் இணைக்கும் சுண்டிகுளம் எனுமிடைத்தை சிறிலங்க இராணுவம் கைப்பற்றிவிட்டதால், அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

கல்லாறு, விசுவமேடு ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகள் மீதும் எரிகணைத் தாக்குதல் நடத்தப்படுவதாகவும், அதன் காரணமாக அந்த மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல்களைப் பெற முடியவில்லை என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.

சிறிலங்க இராணுவத்தின் தொடர் தாக்குதல் காரணமாக வன்னிப் பகுதியில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதென கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்