இலங்கையில் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரசியல் தீர்வு ஒன்றைக் காண இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் உறுதியளித்தார்.
கொழும்புவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவை சந்தித்து கலந்துரையாடியபோது சிவசங்கர் மேனன் இவ்வாறு தெரிவித்தார் என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
கொழும்பில் உள்ள இந்திய தூதரின் இல்லத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற சந்திப்பில் சிவசங்கர் மேனனுடன் கொழும்பில் உள்ள இந்திய தூதர் அலோக் பிரசாத்தும் தூதரகத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ். மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில், "இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. போர் நடவடிக்கையினால் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற அழிவுகளை இந்தியா தடுத்து நிறுத்தும். உயிரிழப்புகள், சேதங்கள், மக்கள் இடப்பெயர்வுகள் பற்றிய விபரங்கள் எல்லாவற்றையும் இந்தியா அறிந்திருக்கிறது." என்று சிவசங்கர் மேனன் கூறியதாக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும், தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைக்கு நேர்மையான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சிவ்சங்கர் மேனனிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு, "தமிழ் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரசியல் தீர்வு ஒன்றைக் காண இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று அவர் உறுதியளித்தார் என்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.