காஸாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல் ராணுவம் இன்றிரவு முடிவு
சனி, 17 ஜனவரி 2009 (14:26 IST)
பாலஸ்தீனத்தின் காஸா மீதான ராணுவத் தாக்குதலை நிறுத்தும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீது இஸ்ரேல் ராணுவ அமைச்சகம் இன்றிரவு முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் ராக்கெட் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்துவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காஸா மீது இஸ்ரேல் ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 3 வாரங்களாக நடந்து வரும் இத்தாக்குதலில் 1,100க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் நிலையில் உள்ளது.
இதையடுத்து இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் காஸா மீதான ராணுவத் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதன் பேரில், இரு தரப்பினருக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த எகிப்து களமிறங்கியது.
கடந்த புதனன்று எகிப்து உளவுத்துறை தலைவர் ஓமர் சுலெய்மானுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பேசிய ஹமாஸ் அதிகாரி ஒருவர், எகிப்து சார்பில் தயாரிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஓராண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி உடனடியாக போரை நிறுத்துவது, மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதி வழங்குவது, காஸா-எகிப்து இடையில் ஆயுதக் கடத்தலை நிறுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
இப்போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் இயக்கத்தினர் நேற்று அறிவித்த நிலையில், இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? என்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் இன்றிரவு முடிவு செய்யும் எனத் தெரிகிறது.