மும்பை தாக்குதலுக்கு பின்னர் 71 பேர் கைது: பாக். அமைச்சர்
வியாழன், 15 ஜனவரி 2009 (18:34 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 71 பேரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தான் செயல்படும் என்று கூறினார்.
அவர்களில் லஷ்கர்-ஈ-தயீபா, ஜமாத்-உத்-தாவா அமைப்பின் நிறுவனர் ஹஃபீஸ் முகமது சயீத், முஃப்தி அப்துர் ரெஹ்மான், நசீர் அகமது, அமீர் ஹம்ஸா மற்றும் லஷ்கர்-ஈ-தயீபாவின் முக்கிய தளபதியான ரெஹ்மான் லாக்வி உள்ளிட்டோரும் அடங்குவர். இவர்களைத் தவிர பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 124 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியா வழங்கிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமானால் அதன் மீது நடவடிக்கைகள் தேவை என்றும், அதுதொடர்பான முயற்சிகளை பாகிஸ்தான் செய்து வருகிறது என்றும் அமைச்சர் ரெஹ்மான் அப்போது தெரிவித்தார்.