இந்திய ஆதாரத்தின் மீது உண்மையான புலனாய்வு: பாகிஸ்தான்
புதன், 7 ஜனவரி 2009 (16:36 IST)
மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியா வழங்கியுள்ள ஆதாரத்தின் மீது உண்மையான புலனாய்வு நடத்தப்படும் என பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.
நேற்று நடந்த கூட்டத்தில் இதுகுறித்து அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர் விவாதித்ததுடன், இந்தியா வழங்கியுள்ள ஆதாரங்களை வைத்து உண்மையான புலனாய்வு நடத்துவது என முடிவு செய்ததாக ‘தி நியூஸ் டெய்லி’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் புலனாய்வுக்கு முழு ஆதரவு அளிப்பது என்றும் அவர்கள் முடிவு செய்ததாகவும், மும்பை தாக்குதலில் குற்றவாளிகள் பிடிபட்டால் அவர்களுக்கு பாகிஸ்தான் சட்டப்படி தண்டனை அளிக்கப்படும், இந்திய அரசிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் எனக் கூறியதாகவும் அந்நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் தொடர்பான பாகிஸ்தானின் புலனாய்வை துரிதப்படுத்த, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் நேற்று கூறியுள்ளார்.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்த ஒரு சில மணி நேரத்திற்கு உள்ளதாகவே பாகிஸ்தான் அதனை திட்டவட்டமாக மறுத்ததுடன், பிரதமரின் கருத்துகள் ஏற்புடையது அல்ல எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.