இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

திங்கள், 5 ஜனவரி 2009 (14:09 IST)
காஸா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் இன்று நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸாவின் புறநகர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தியதில் 3 குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய் ஆகியோர் உயிரிழந்தனர். இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் குறைந்தது 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இஸ்ரேல் எல்லையில் உள்ள நகரங்கள் மீது காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த சில நாட்களாக ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்த இஸ்ரேல், கடந்த 27ஆம் தேதி காஸா மீது வான்வழித் தாக்குதல் நடத்தி பாலஸ்தீனம் மீது ராணுவ நடவடிக்கையை துவக்கியது.

அன்று முதல் இஸ்ரேல் ராணுவ காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான அப்பாவி பாலஸ்தீன மக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என ஐ.நா உட்பட பல சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்தாலும், தனது ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்