ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நிலநடுக்கம்

திங்கள், 5 ஜனவரி 2009 (11:53 IST)
ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதிகள் மற்றும் பாகிஸ்தானில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் இதனால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடகிழக்கே 275 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.43 மணிக்கு (இந்திய நேரப்படி 4.43 ம‌ணி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹிந்துகுஷ் மலைத்தொடரில் பூமிக்கடியில் 190 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ளவர்களும் உணர்ந்ததாகவும், இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மண்டலத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவானது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்