இலங்கையில் எல்டிடிஈ-யினர் வசமிருந்த கிளிநொச்சியை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றிய சில தினங்களில், யானையிறவுப் பகுதியையும் புலிகளிடம் இருந்து அரசுப் படையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகளின் அரசியல் - ராணுவ அதிகார மையமாக விளங்கிய கிளிநொச்சியை, இலங்கை அரசுப் படையினர் சுற்றிவளைத்து பிடித்ததுடன், புலிகளிடம் இருந்து வடக்குப் பகுதியான யானையிறவும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து 350 கி.மீ. வடக்கே உள்ளது கிளிநொச்சி. யானையிறவானது கிளிநொச்சியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது.
யானையிறவு தங்கள் கட்டுப்பாட்டில் வந்திருப்பதன் மூலம் யாழ்ப்பாணம் - கண்டி இடையேயான முக்கிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து எளிதில் மேற்கொள்ளலாம் என்றும், யாழ்ப்பாணத்திற்கு அரசுப் படையில் செல்வது எளிதாகும் என்றும் இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடந்து கிளிநொச்சி மற்றும் பராந்தன் பகுதிகளில் இருந்து வடக்கு நோக்கி 2 கி.மீ. தொலைவில் இராணுவப் படையினர் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசுப் படையினரை எதிர்த்து விடுதலைப்புலிகள் கடுமையாகப் போராடி வந்தாலும், புலிகள் பலர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
கடந்த 2000ஆவது ஆண்டில் யானையிறவை தங்கள் கட்டுப்பாட்டில் விடுதலைப்புலிகள் கொண்டு வந்தனர்.
தற்போது அரசுக் கட்டுப்பாட்டில் யானயிறவு வந்திருப்பதன் மூலம், புலிகளுக்கு எதிரான தாக்குதலில் அரசு முன்னேறி வருவதாக தெரிகிறது.