காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், பாலஸ்தீன மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் விதமாக, புத்தாண்டு கொண்டாட்டம், அதுதொடர்பான அனைத்து கேளிக்கை நிகழ்ச்சிகளை துபாய் அரசு ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் முகமது பின் ரஷித் வெளியிட்டுள்ள உத்தரவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்ட தகவலை நாடு முழுவதும் அதிகாரிகள் அறிவிப்பதுடன், இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
துபாயில் புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதமாக நட்சத்திர விடுதிகளில் பகட்டான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன், கண்ணைப் பறிக்கும் வாண வேடிக்கைகளும் நடத்தப்படும்.
சர்வதேச நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புத்தாண்டு தினத்தை கொண்டாட உல்லாச நகரமான துபாயில் குவிவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காஸா மீதான தாக்குதலைத் தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.