இந்தியாவுடன் போர் ஏற்படுவதை தவிர்க்க வேண்டியது அவசியம் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி பர்வேஸ் கயானி தெரிவித்துள்ளார்.
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டதால், பாகிஸ்தான் தரப்பை அமைதிப்படுத்தும் விதமாக தனது அயலுறவு துணை அமைச்சர் ஹீ யஃபேவை கயானியுடன் பேச்சு நடத்த சீனா அனுப்பி வைத்தது. இச்சந்திப்பின் போது துணைத்தளபதி தாரிஜ் மஜீதி உடனிருந்தார்.
தளபதி கயானியை சந்தித்த யஃபே, இந்தியாவுடனான போர் பதற்றத்தை பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்புக்குப் பின்னர் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி, பாதுகாப்பு கருதி இந்தியாவுடனான போர்ப் பதற்றத்தை குறைக்க வேண்டும் என்று கயானி வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவுடனான போர் பதற்றத்தின் போதும் பாகிஸ்தான் சுமுகமாக செயல்பட்டது. அதேசமயம் இந்தியா ராணுவ நடவடிக்கையில் இறங்கினால் பாகிஸ்தான் தகுந்த பதிலடி தரும் என சீன அயலுறவு துணை அமைச்சரிடம், கயானியும், மஜீத்தும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.