கிளிநொச்சியைக் கைப்பற்ற கடுமையாக முயற்சிக்கும் சிறிலங்க இராணுவத்தினருக்கு அது சாவுப்பொறியாக மாறிவருகின்றது என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் பா. நடேசன் கூறியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தருமபுரம் எனுமிடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழீழ மாணவர் அமைப்பின் முதலாவது பொறுப்பாளர் மேஜர் முரளியின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் அஞ்சலி உரை நிகழ்த்திய நடேசன், கிளிநொச்சிவரை வந்திருக்கும் சிறிலங்க படையினருக்கு முடிவு கட்டினாலே தமீழத்திற்கான விடுதலை விரைவாக கிடைக்கும் என்பதுதான் உண்மை என்று கூறியுள்ளார்.
“சிறிலங்க படையினருக்கு கிளிநொச்சி இப்போது சாவுப்பொறியாக மாறுகின்றது. வருகின்ற சிங்களப் படைகள் முழுவதும் அழிக்கப்படும்போது எமது நாடு விடுதலை பெறும். இதுதான் இன்றைய கள உண்மை” என்று நடேசன் கூறியுள்ளதாக புதினம் இணையத்தளம் தெரிவிக்கின்றது.
2,250 புலிகளை இழந்துள்ளோம்!
தங்களது தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல என்று கூறியுள்ள நடேசன், தங்களது விடுதலைப் போராட்டம் இலட்சியத்தை மையமாகக் கொண்டது என்று கூறியுள்ளார்
பன்னாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த நேர்காணில், “கிளிநொச்சிப் போர்களத்தில் சிறிலங்க படையினருக்கு நாங்கள் பாடம் கற்பிப்போம், எமது வலிந்த தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு உரிய காலம் வரும்வரைக் காத்திருப்போம்” என்று கூறியுள்ளார்.
2008ஆம் ஆண்டில் மட்டும் 2,250 விடுதலைப் புலிகளை தாங்கள் இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ள நடேசன், “ஆயுதங்களை பெற்றுக்கொள்வதில் எமக்கு எந்தவிதமாக சிக்கலும் இல்லை. நாங்கள் இழந்த பகுதியை மீண்டும் கைப்ப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது” என்றும் கூறியுள்ளார்.