நவாஸ் ஷெரீப் அதிபராக பாக். மக்கள் விருப்பம்: கருத்துக்கணிப்பு
சனி, 20 டிசம்பர் 2008 (17:40 IST)
நாடு தற்போது தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் மக்கள், முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் அதிபர் பதவிக்கு ஏற்றவர் எனக் கூறியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த இன்டர்நேஷனல் ரிபப்ளிக்கன் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் சார்பில் பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் ஆய்வில் பங்கேற்ற 88 விழுககாடு மக்கள் பாகிஸ்தான் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், 76 விழுக்காட்டினர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டணி ஆட்சி முக்கிய விவகாரங்களில் சரியாக செயல்படவில்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி தேர்வு செய்யப்பட்ட அரசு, அதிபர் பதவியேற்ற பின்னர் நாட்டின் நிலைமை மேம்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு 67 விழுக்காட்டினர் இல்லை என பதிலளித்துள்ளனர்.
தற்போதைய சூழலில் அதிபர் பதவிக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்ற கேள்விக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் என்று 59 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். சுமார் 19 விழுக்காட்டினர் மட்டுமே சர்தாரி அதிபராகத் தொடர ஆதரவு தெரிவித்துள்ளனர். பர்வேஸ் முஷாரப்புக்கு 3 விழுக்காடு ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.