பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்கள்தான் என்பதற்கு ஆதாரமில்லை: சர்தாரி
வியாழன், 18 டிசம்பர் 2008 (14:36 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியுள்ள அதிபர் சர்தாரி, இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் அமிர் கஸாப் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்தான் என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.
பி.பி.சி தொலைக்காட்சிக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அளித்துள்ள பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 10 பேர் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் கூறுவது குறித்து சர்தாரியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்துப் பேசிய சர்தாரி, அதுபோன்று கூறுவதற்கு அவர்களிடம் ஏதாவது ஆதாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியதுடன், இதுவரை அதற்கான ஆதாரம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றார்.
மும்பை தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்து தோன்றியவர்களே என இங்கிலாந்துப் பிரதமர் கோர்டன் ப்ரௌன், மேற்கத்திய, இந்திய புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, புலனாய்வு என்பது தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய விடயம். இதுகுறித்த புலனாய்வு தொடர்ந்து நடந்து வருவதாக இந்திய அயலுறவு அமைச்சரும் கூறியுள்ளார்.
எனவே இவ்விடயத்தில் புலனாய்வு முழுமையாக முடியும் வரையிலும், அதுபற்றிய தடயங்களை பாகிஸ்தானிடம், இந்தியா வழங்கும் வரையிலும் எந்தக் முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது எனக் கருதுவதாக தெரிவித்தார்.
பரிட்கோட் கிராமத்தில் உள்ளவர் அமிர் கஸாப் தனது மகன்தான் என்று செய்தியாளர்களுக்கு கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு, இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். ஏனென்றால் பத்திரிகைகளில் சர்ச்சைக்குரிய தகவல்களும் இடம்பெறலாம் என்பதால் இதுபற்றி ஒரு முடிவுக்கு என்னால் வரமுடியவில்லை என பதிலளித்தார்.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தால், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட முறையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமது நாடாளுமன்றமும், அரசும் தயாராக உள்ளதாகவும் சர்தாரி குறிப்பிட்டார்.
மேலும், இவ்விடயத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.