இந்தியா-பாக். அமைதிப் பேச்சை மீண்டும் துவக்க வேண்டும்: ஜான் கெர்ரி
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுகளை மீண்டும் இரு நாடுகளும் துவக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் கெர்ரி வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி, அயலுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, ராணுவத் தளபதி பர்வேஸ் கயானி ஆகியோரை சந்தித்துப் பேசிய பின்னர் அமெரிக்கத் தூதரின் இல்லத்தில் அந்நாட்டின் “டான்” நாளிதழுக்கு கெர்ரி பேட்டியளித்தார்.
அப்போது, மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகள் பற்றியும் இந்தியா அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுதொடர்பாக இந்தியா அறிந்துள்ள எண்ணிக்கையை விட அதிகளவிலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்நாளிதழ் தெரிவிக்கிறது.
பயங்கரவாத முகாம்களை தற்காலிகமாக மூடுவது அல்லது சிலரை வீட்டுக்காவலில் வைப்பது போன்ற நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டுவிட்டு அத்துடன் நின்றுவிட முடியாது என்பதை பாகிஸ்தான் தலைமை உணர்ந்துள்ளது.
எனினும், 2001 இந்தியா நாடாளுமன்றத் தாக்குதலுக்கு பின்னர் அந்நாட்டிற்கு அளித்த உறுதிமொழிகளை தற்போது நடைமுறைப்படுத்துவதன் மூலமே இந்தியாவின் நம்பிக்கையை பாகிஸ்தான் பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டும் எனவும் ஜான் கெர்ரி வலியுறுத்தியுள்ளார்.