பயங்கரவாதிகள் மீது தீர்மானமான நடவடிக்கை: பாக. அரசுக்கு ப்ரௌன் வலியுறுத்தல்

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (12:18 IST)
பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையில்தான் பாகிஸ்தானின் எதிர்காலம் அடங்கியுள்ளது எனக் தெ‌ரி‌வி‌த்த இங்கிலாந்து பிரதமர் கோர்டன் ப்ரௌன், பயங்கரவாத தொடர்புகளை முறியடிக்க பாகிஸ்தான் அரசு தீர்மானமான, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய பிரதமர் கோர்டன் ப்ரௌன், இங்கிலாந்து பொதுச் சபையில் நேற்றிரவு நடந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, பாகிஸ்தானில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக அரசுக்கு நாம் முழு ஆதரவு அளித்து வருகிறோம். அதேவேளையில் பா‌கி‌ஸ்தா‌ன் மண்ணில் செயல்படும் பயங்கரவாத சக்திகளை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றார்.

பாகிஸ்தானில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனநாயக அரசின் நடவடிக்கைகள், அண்டை நாடுகளுடனான உறவுகள் ஆகியவற்றை முடக்க முயற்சித்து வரும் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்தான் அந்நாட்டின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்றார்.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் மையம் கொண்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகள், இங்கிலாந்தில் உள்ள வீதிகளிலும், உலகின் பிற இடங்களில் எதிரொலிக்கின்றன. இந்த பயங்கரவாத தொடர்புகள் ஒழிக்கப்பட வேண்டும் எனக் ப்ரௌன் கூறினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான திறனை உருவாக்குவதில் இந்தியா, பாகிஸ்தானுடன் தமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்