மௌலானா அப்துல் அல்வியின் வீட்டுக்காவல் ரத்து

திங்கள், 15 டிசம்பர் 2008 (18:18 IST)
ஜமாத்-அல்-தவா அமைப்பின் முக்கிய தலைவரான மௌலானா அப்துல் அசிஸ் அல்விக்கு விதிக்கப்பட்டிருந்த வீட்டுக்காவல் தண்டனையை பாகிஸ்தான் இன்று விலக்கிக் கொண்டது.

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-ஈ-தயீபாவின் துணை அமைப்பான ஜமாத்-அல்-தவாவுக்கு ஐ.நா பாதுகாப்பு சபை தடைவிதித்ததைத் தொடர்ந்து அந்த அமைப்பின் மண்டலத் தலைவர்களில் ஒருவரான மௌலானா அப்துல் அசிஸ் அல்வி, கல்யாண் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த வியாழனன்று இரவு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், அந்நாட்டின் டான் நாளிதழுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் காவல்துறை துணை ஆணையர் சௌத்ரி இம்தியாஸ் அளித்துள்ள பேட்டியில், அசிஸ் அல்வியின் வீட்டுக் காவலுக்காக நியமிக்கப்பட்ட காவலர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறினார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறிய சௌத்ரி, வீட்டுக்காவல் விலக்கப்பட்டாலும் அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும், அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் அவர் அப்பகுதியை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேபோல் முஸாஃபராபாத் அருகே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் சௌத்ரி குறிப்பிட்டார். இவர்கள் நால்வரும் ஜமாத்-உல்-தவா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்