மும்பை தாக்குதல் சதித் திட்டம் தீட்டிய லஸ்கர் பயங்கரவாதி கைது!
திங்கள், 8 டிசம்பர் 2008 (13:12 IST)
மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை சதித் திட்டம் தீட்டி நிறைவேற்றியதன் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் லஸ்கர் ஈ தயீபா பயங்கவாதி ஜாக்கீர் ரெஹ்மான் லாக்வி உட்பட அந்த இயக்கத்தைச் சேர்ந்த 20 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் தலைநகரான முசாஃபராபாத்தில் உள்ள லஸ்கர் ஈ தயீபா இயக்கத்தின் முகாம் ஒன்றில் பாகிஸ்தான் இராணுவம் நேற்று மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஜாக்கீர் உட்பட இந்த 20 பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டுக் கைதான பயங்கரவாதிகளில் ஒருவரான அஜ்மல் அமீர் இமாம், மும்பை காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மும்பைத் தாக்குதல் சதித் திட்டத்தை தீட்டியது ஜாக்கீர் ரெஹ்மான் லாக்விதான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2001ஆம் ஆண்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதலைத் தொடர்ந்து லஸ்கர் இயக்கத்தை பாகிஸ்தான் அரசு தடை செய்தது. இதனைத் தொடர்ந்து ஜமாத் உத் தாவா என்ற பெயரில் லஸ்கர் பயங்கரவாதிகள் செயல்படத் துவங்கினர்.
எனவே, முசாஃபராபாத்தில் உள்ள ஜமாத் உத் தாவா அமைப்பின் முகாம்களில் பாகிஸ்தான் இராணுவம் இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையின்போது ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட ஜமாத் உத் தாவா பயங்கரவாதிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்களா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
ஜமாத் உத் தாவாவின் (லஸ்கர் ஈ தயீபா) தலைவன் ஹபீஸ் மொஹம்மது சயீது கைது செய்யப்பட்டு கையளிக்கப்பட வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் ஹபீஸ் இதுவரை கைது செய்யப்படவில்லை.