விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும்: பா. நடேசன்!
சனி, 22 நவம்பர் 2008 (11:23 IST)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவின் உண்மையான நண்பன், எனவே தங்களின் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்று அவ்வியக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டையிடும் சிறிலங்கா ராணுவத்திற்கு வழங்கப்படும் எல்லா ராணுவ உதவிகளையும் இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இந்தியாவில் இருந்து வெளியாகும் 'த வீக்' ஆங்கில இதழிற்கு மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
”தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் எங்களின் மக்களும் இந்தியாவின் உண்மையான நண்பர்கள் என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே இந்திய அரசு எங்களின் போராட்டத்தை அங்கீகரித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டையிட்டு வரும் சிறிலங்கா ராணுவத்திற்கு வழங்கப்படும் எல்லா ராணுவ உதவிகளையும் இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
எங்கள் தலைவரின் (வேலுப்பிள்ளை பிரபாகரன்) உடல்நலம் மிகச் சிறப்பாக உள்ளது. தற்போதைய போர் அவரது தலைமையில்தான் நடந்து வருகிறது. எங்கள் இயக்கத்தையும் தமிழர்களையும் வெறுப்பவர்கள்தான் தவறான பிரச்சாரங்களை (பிரபாகரன் நீண்ட காலம் வாழ மாட்டார் என்று) பரப்பி வருகின்றனர்.
இனப் பிரச்சனைக்குப் போர் நிறுத்தத்தின் மூலமும் அமைதிப் பேச்சின் மூலமும்தான் தீர்வுகாண முடியும் என்று நாங்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், ராணுவத் தீர்வுதான் ஒரே வழி என்று சிறிலங்க அரசும் அதன் ராணுவத் தளபதிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே வழி என்று அரசு தொடர்ந்து நம்புமானால், மக்கள் தங்களுக்குத் தேவையானதைப் பிற நாடுகளின் உதவியுடன் போராடிப் பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
சிறிலங்கா ராணுவத்தின் தாக்குதல்களால் வடக்கில் வாழும் பாதிக்கப்படும்போதெல்லாம் தமிழக மக்கள் தங்களின் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்று சேர்வது மகிழ்ச்சியளிக்கிறது”
இவ்வாறு பா. நடேசன் கூறியுள்ளார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், 'இந்திய அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளைத் தருகிறது என்று சிறிலங்கா அரசும் அதன் ராணுவ அதிகாரிகளும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக இந்தியா அமைதி காத்து வருகிறது. இது இலங்கைத் தமிழர்கள், தமிழக மக்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் கவலை அளிக்கிறது' என்றார்.
இலங்கை சிங்களர்களுக்குச் சொந்தமானது என்று அந்நாட்டு ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அயல்நாட்டு இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது குறித்துக் கேட்டதற்கு, 'அவர் ஒரு பொறுப்பில்லாத பக்குவமில்லாத ராணுவத் தளபதி என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்நாட்டில் சிங்களர்கள் பெரும்பான்மையானவர்கள் என்று நானும் உறுதியாக நம்புகிறேன். ஆனால் இங்கு சிறுபான்மை இனத்தவரும் உள்ளனர். அவர்களையும் நமது மக்களைப் போலவே நடத்த வேண்டும்" என்றார் நடேசன்.
வடக்கில் சிறிலங்கா ராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் குறித்துக் கேட்டதற்கு, "எங்கள் தாயகம் பல ஆண்டுகளாகப் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருகிறது. தற்போதைய ராணுவ நடவடிக்கைகளால் ஏராளமான தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் காடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தங்களின் உரிமைக்காகப் போராடும் மக்களை சிறிலங்கா அரசு கண்மூடித்தனமாக அடக்கி வருகிறது. ஊடகங்கள் இதை வெளியிட மறுக்கின்றன என்பதுதான் சோகமான விடயம். எங்களைப் பொறுத்தவரை இது 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலம்" என்றார் நடேசன்.