ஜி-20 உச்சிமாநாடு: பிராங்க்பர்ட் சென்றார் பிரதமர்!

வெள்ளி, 14 நவம்பர் 2008 (10:32 IST)
வாஷிங்டனில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் அங்கு செல்லும் வழியில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் சென்றடைந்தார்.

புதுடெல்லியில் இருந்து புறப்படும் முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச அளவில் சமீபகாலமாக நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக உலக தலைவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பாக இந்த மாநாடு அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுபோன்ற நிதி நெருக்கடியை தடுத்து நிறுத்தி, எதிர்மறையான பொருளாதார நிலையை போக்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்படும் என்றும் பிரதமர் அதில் கூறியுள்ளார்.

இதுபோன்ற நெருக்கடியான நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுப்பதில், ஜி-20 உச்சி மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறியுள்ள அவர், இந்திய பொருளாதாரத்தைப் பொருத்தவரை அதன் அடிப்படை வலுவாக உள்ளது என்றார்.

தவிர இந்தியாவில் போதிய பணப்புழக்கத்தை ஏற்படுத்தி, கடன் முறைகளில் மாற்றம் செய்திருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கைகளினால் நாட்டின் வளர்ச்சி விகிதம் முன்னேற்றப் பாதையில் செல்லும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். பிரதமருடன் நிதியமைச்சர் ப. சிதம்பரமும் சென்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்