அருணாசலப் பிரதேசம் அதிகாரப்பூர்வமாக பிரிக்கப்படவில்லை: சீனா!
செவ்வாய், 11 நவம்பர் 2008 (18:12 IST)
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதை சீனா நிராகரிப்பதாக கூறியுள்ளது.
சீனத் தலைநகர் பீஜிங்கில் இன்று பேசியுள்ள அந்நாட்டு அயலுறவு பேச்சாளர் கின் காங், வரலாற்றுப்பூர்வமான விவரங்களை கருத்தில் கொள்ளாமல் இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் பேசியுள்ளதாகக் கூறியுள்ளார்.
“இந்திய, சீன எல்லையாக மெக்மோகன் கோட்டை சட்டத்திற்குப் புரம்பானது, அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இந்தியாவிற்குத் தெரியும். அவ்வாறு இருந்தும் இந்தியா இப்படி பேசியுள்ளது வருத்தமளிக்கிறது” என்று கின் காங் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு சீனத்திற்கும் இடையிலான எல்லை இதுவரை சட்டரீதியாக வரையறை செய்யப்படவில்லை என்று கூறிய கின் காங், இரு நாடுகளுக்கும் இடையிலான கிழக்குப் பகுதி எல்லை மீதான சீனத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை என்பது இந்தியாவிற்கும் தெரியும் என்று கூறியுள்ளார்.
1914ஆம் ஆண்டு சிம்லா உடன்படிக்கையின் படி மேற்கொள்ளப்பட்ட எல்லைப் பிரிவை சீனா ஏற்கவில்லை என்பதும் இந்தியாவிற்கு தெரியும் என்று கின் காங் கூறினார்.