சவால்களை சமாளிப்பாரா புதிய அதிபர் ஒபாமா!

வெள்ளி, 7 நவம்பர் 2008 (13:25 IST)
செப்டம்பரின் முற்பகுதியில் அமெரிக்கா வரலாறு காணாத பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. அதன் காரணமாக வங்கித்துறை ஜாம்பவான்களாக கருதப்பட்ட பெரிய நிறுவனங்கள் திவாலாகியதைத் தொடர்ந்து, அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் முதல் நேரடி விவாதத்தில் பங்கேற்பதை குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மெக்கெய்ன் ரத்து செய்வதாக அறிவித்துடன் பிரசாரத்தை தற்காலிகாக நிறுத்திவிட்டு வாஷிங்டனுக்கு திரும்பினார்.

ஆனால் அவரிடம் அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்தும் எந்தத் தெளிவான திட்டமும் இல்லை. அதேவேளை அவரது போட்டியாளரும், அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளவருமான ஒபாமாவிடமும் அப்போது எந்தத் திட்டமும் இல்லைதான்.

PTI PhotoFILE
ஆனால் அச்சமயத்தில் பராக் ஒபாமாவின் பதட்டமற்ற செயல்பாடும், நேரடி விவாதத்தின் போது அவரது அமைதியான அணுகுமுறையும் அமெரிக்க மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அதிபர் பிரசாரத்தில் ஒபாமா தொடர்ந்து முன்னேறினார். முடிவில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 60% மக்கள் பொருளாதார சவால், நிதி நெருக்கடி ஆகியவையே முக்கிய பிரச்சனை என்று கருதுகின்றனர். இதனை ஒபாமா சீர் செய்வார் என அமெரிக்கா மட்டுமின்றி உலக முழுவதும் உள்ளவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஓரிரு தினங்களிலேயே, தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் தலைமையில் வரும் 20ஆம் தேதி இந்தியா உட்பட இருபது சர்வதேச நாடுகள் பங்கேற்கும் சர்வதேச நிதி மாநாட்டில் முக்கிய பங்காற்ற உள்ளார். அப்போது தனது நிதியமைச்சரை ஒபாமா அறிவிப்பார் எனத் தெரிகிறது. இதற்காக தனது பிரசாரத்தின் போதே உலக செல்வதந்தர்களில் ஒருவரான வாரன் பஃப்பெட் ஆகியோரிடம் ஒபாமா ஆலோசனை கோரியது குறிப்பிடத்தக்கது.

கொள்கைகளைப் பொறுத்தவரை ஒபாமாவின் அறிவிப்புகள் அமெரிக்காவில் அதிகமுள்ள நடுத்தர, கீழ்தட்டு மக்களின் நலனைப் பாதுகாக்கும் விதமாகவே இருக்கும். மக்களுக்கு விதிக்கப்படும் வரியை உயர்த்த வேண்டும் என அவர் பிரசாரத்தின் போது கூறியிருந்தாலும், காலம்தான் அதற்கு பதில் சொல்லும்.

ஈராக்கில் அமெரிக்கப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுவேன் என அவர் கூறி வருவதால், அமெரிக்காவுக்கு மாதம்தோறும் 10 பில்லயன் டாலருக்கும் கூடுதலாக செலவாகும் தொகை மிச்சப்படுத்தப்படும்.

PTI PhotoFILE
அமெரிக்காவில் வீட்டுக் கடன்களுக்கான வட்டி உயர்ந்ததே அந்நாட்டில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடிக்கு மூலகாரணம் என்றாலும், வீட்டுவசதித் துறையில் அமெரிக்க மக்களிடம் மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்துவதன் அவசியத்தை ஒபாமா உணர்ந்துள்ளார். பொருளாதார விவகாரங்களில் அவர் வல்லுனர் இல்லையென்றாலும், அத்துறையில் வல்லுனர்களாக உள்ள தனது அலுவலர்களின் அறிவுரையைப் பெறும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

எரிசக்தி கண்டுபிடிப்பு ஆய்வுகளை அதிகப்படுத்துவது, மாற்று எரிசக்தியை மேம்படுத்த அத்துறையில் முதலீடுகளை அதிகரிப்பது ஆகிய விஷயங்களில் ஒபாமா தொடர்ந்து கவனம் செலுத்துவார் என்றும், கட்டமைப்புத்துறை முதலீடுகளையும் அவர் பன்மடங்கு உயர்த்துவார் என்றும் நம்பப்படுகிறது. எனினும் இவை அனைத்தும் ஒரேநாளில் நடந்துவிடக் கூடிய விஷயமில்லை.

என்றாலும் குடியரசு செனட் உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் பொருளாதாரத்தில் உலகின் முக்கிய அதிகார மையமாக விளங்கும் அமெரிக்காவின் நிலையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு ஒபாமாவுக்கு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்திலும், அதற்காக நிதி வழங்குவதிலும் ஒபாமாவை இந்தியர்கள் முழு மனதாக ஆதரித்துள்ளனர். பெப்ஸி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி போன்ற முக்கிய இந்திய நபர்கள் அவருக்கு நெருங்கிய வர்த்தக ஆலோசகர்களாக திகழ்கின்றனர். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்ததால் இரு நாடுகளுமே பயனடையும் என்பதிலும் ஒபாமா தீர்மானமாக இருக்கிறார்.

வெளிநாட்டுக்கு வழங்கப்படும் அவுட்சோர்ஸிங் பணிகளை திடமான வரிவிதிப்பு கொள்கைகள் மூலம் அமெரிக்காவிலேயே செய்வதற்கான நிலையை ஏற்படுத்துவது, அமெரிக்காவில் கூடுதல் பணிகளை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தனது அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போதே ஒபாமா கூறியிருந்தாலும், அவை எந்தளவு நடைமுறைப்படுத்தப்படும் என்பதும், இந்தியா அவுட்சோர்ஸிங் துறையில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதும் இனிமேல்தான் தெரியவரும்.

இது இப்படியிருந்தாலும், குறைந்த காலநோக்கில் பார்க்கும் போது அமெரிக்காவில் அமைய உள்ள புதிய அரசு, கொள்கை மாற்றங்களால் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் ஓரளவு உயர்வை எட்டும். குடியரசுக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 150 டாலரை எட்டியதைப் போன்ற நெருக்கடி நிலை இனி ஏற்படாது என்றும் நம்பப்படுகிறது.