அதிபர் தேர்தல்: 364 இடங்களில் ஒபாமா வெற்றி!

புதன், 5 நவம்பர் 2008 (17:10 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் முற்றிலுமாக அறிவிக்கப்பட்டு விட்டன. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கு 364 எலக்டோரல் வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் 174 வாக்குகளும் கிடைத்துள்ளன.

அமெரிக்காவின் 44வது அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 4ஆம் தேதி (நேற்று) மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தேர்தல் முடிவடைந்த சில மணி நேரத்தில் துவங்கியது.

அமெரிக்க பாரம்பரிய வழக்கப்படி நியூஹாம்ப்ஷையரின் டிக்ஸ்வில்லி நாட்சில் பகுதி வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. இதில் ஒபாமா 15 வாக்குகள் பெற்று முதல் வெற்றியை ருசித்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் அப்பகுதியில் 6 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இதையடுத்து இன்று அதிகாலை முதலே பெரும்பாலான இடங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. குடியரசுக் கட்சியின் கோட்டை எனக் கருதப்படும் விர்ஜீனியா, புளொரிடா, ஓஹையோ, கலிபோர்னியா ஆகிய முக்கிய இடங்களில் ஒபாமா அதிக வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.

தொடர்ந்து வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி மொத்தமுள்ள 538 எலக்டோரல் வாக்குகளில், ஒபாமா 364 வாக்குகள் பெற்றுள்ளார். மொத்த ஜனத்தொகை வாக்குகளின் அடிப்படையில் ஒபாமாவுக்கு 52 விழுக்காடு (57,675,402) மக்களும், மெக்கெய்னுக்கு 47 விழுக்காடு (52,257,739) மக்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

முதல் கருப்பின அதிபர்: இதுவரை 43 பேர் அமெரிக்காவின் அதிபர்களாக (ஜார்ஜ் புஷ் உட்பட) பதவி வகித்தாலும் அவர்களில் ஒருவர் கூட கருப்பினத்தை சேர்ந்தவர் இல்லை என்பதால், அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக கருப்பினத்தை சேர்ந்த ஒபாமா அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி அதிபராக முறைப்படி பதவியேறக உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்