அமெரிக்காவில் பயின்ற ஆந்திர மாணவி கொலை!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (17:16 IST)
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் மேற்படிப்பு பயின்று வந்த ஆந்திர மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஹைதராபாத் ஜவஹர்லால் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பி.சி.ஜினாகா. இவரது மகள் அபர்ணா ஜினாகா (வயது 24). ஹைதராபாத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார். பின்னர் அமெரிக்காவில் மென்பொருள் வல்லுனராக பணியாற்றிக் கொண்டே, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள கல்லூரியில் எம்.எஸ் பயின்று வந்தார்.

இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாக, ஹைதராபாத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பரில் சிகாகோ நகரில் மேற்படிப்பு பயின்று வந்த இந்திய மாணவி சௌம்யா ரெட்டி அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார்.

அந்நாட்டின் பென்சில்வேனியா பகுதியில் மருத்துவ பட்டமேற்படிப்பு பயின்ற மாணவர் ஸ்ரீநிவாஸ் கடந்த மார்ச்சில் கொலை செய்யப்பட்டார். இதேபோல் கடந்த 2007 டிசம்பரில் ஆந்திராவைச் சேர்ந்த கிரண்குமார், சந்திரசேகர ரெட்டி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்