அமெரிக்க வாழ் இந்தியரை கைது செய்ய உத்தரவு!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (11:49 IST)
மனைவி, மகன், மகளைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான அமெரிக்க வாழ் இந்தியரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் உள்ள நோவி பகுதியில் வசித்தவர் லக்ஷ்மிநிவாஸ ராவ் நேருசு (வயது 42). ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் மென்பொருள் வல்லுனராக பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் வேலையை இழந்ததால் மனமுடைந்த லக்ஷ்மிநிவாஸ் தனது மனைவி ஜெயலட்சுமி (37), மகள் தேஜஸ்வி (14), மகன் சிவா (12) ஆகியோரை கடந்த 26ஆம் தேதி கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தலைமறைவானார். அவரது வீட்டின் அருகில் வசிப்பவர் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 31ஆம் தேதி காவல்துறையினர் அவரது மனைவி, மகள், மகனின் உடல்களைக் கைப்பற்றினர்.

இதுவரை லக்ஷ்மிநிவாஸ் பற்றி எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், அவரைக் கைது செய்ய நோவி காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நோவி காவல்துறை தலைவர் டேவிட் கூறுகையில், தலைமறைவான லக்ஷ்மிநிவாஸை பிடிக்க சர்வதேச அளவில் தேடுதல் பணி துவக்கப்பட்டுள்ளது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்