குடும்பத்தினரை கொன்ற அமெரிக்க வாழ் இந்தியர் தலைமறைவு!
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (15:11 IST)
அமெரிக்க வாழ் இந்தியர் தனது மனைவி, 2 குழந்தைகளை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தலைமறைவாகி உள்ளார்.
அந்நாட்டின் டெட்ராய்ட் நகரில் உள்ள நோவி டவுன் பகுதியில் வசிப்பவர் லக்ஷ்மிநிவாஸ ராவ் நேருசு (வயது 42). ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் மென்பொருள் வல்லுனராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் வேலையை இழந்ததால் லக்ஷ்மிநிவாஸ் மனமுடைந்ததாகத் தெரிகிறது.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் தனது மனைவி ஜெயலட்சுமி (37), மகள் தேஜஸ்வி (14), மகன் சிவா (12) ஆகியோரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தலைமறைவாகி விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தப்பிய லக்ஷ்மிநிவாஸை பிடிக்க சர்வதேச அளவில் தேடுதல் பணி துவக்கப்பட்டுள்ளது.
பலியானவர்களின் உடல்களில், தலை உட்பட பல இடங்களில் ரத்தக் காயம் உள்ளதாகவும், இவை கத்தியால் தாக்கப்பட்டதால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும், கொலை செய்யப்படுவதற்கு முன் தாக்குதலுக்கு உள்ளான சமயத்தில் அவர்கள் போராடியதாலும் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்க பங்குச்சந்தை, பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெரும் சரிவின் காரணமாக கடந்த 3 வாரத்திற்கு முன் அமெரிக்க வாழ் இந்தியரான கார்த்திக் ராஜாராம், தனது குடும்பத்தினர் 5 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு முழுவதுமாக அடங்காத நிலையில், மற்றொரு இந்தியர் தனது குடும்பத்தை கொலை செய்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.