ஊடுருவல் விவகாரத்தில் பாக். நடவடிக்கை எடுக்கும்: பிரதமர் நம்பிக்கை!
புதன், 1 அக்டோபர் 2008 (13:30 IST)
பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்த தேவையான தீவிர நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மன்மோகன் சிங், இரு நாட்டு எல்லைப்பகுதியில் நிகழும் ஊடுருவல், சண்டை நிறுத்தத்தை மீறுதல் குறித்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு பிரான்ஸ் சென்ற பிரதமர் மன்மோகன்சிங், சிறப்பு விமானத்தில் இந்தியா திரும்பும் போது விமானத்திலேயே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு அமைதியான பேச்சுகள் மூலம் தீர்வு காணவே நாம் கடமைப்பட்டுள்ளோம். அதேசமயம் எல்லைப்பகுதியில் ஊடுருவல், சண்டை நிறுத்த மீறல் குறித்த நமது தரப்பு பிரச்சனைகளையும் அவர்களிடம் நான் எழுப்பியுள்ளேன். இவ்விடயத்தில் பாகிஸ்தான் அரசு எதிர்வரும் நாட்களில் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்புகிறேன் என்று செய்தியாளர்களிடம் பிரதமர் கூறினார்.
நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுசபைக் கூட்டத்தில் நிகழ்ந்த அதிபர் ஜர்தாரி உடனான 45 நிமிட சந்திப்பு குறித்து விவரித்த பிரதமர், இருவரும் சந்திப்பது அப்போதுதான் முதல்முறை என்றாலும், அந்த சந்திப்பில் விவாதித்தது பற்றி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின் சாராம்சத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள் எனக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, அது அப்போதைய சூழலைப் பொறுத்தது என பதிலளித்த பிரதமர், இதுபோன்ற பயணங்களில் மிகவும் தயாராகச் செல்ல வேண்டும். பாகிஸ்தானில் தற்போதுள்ள புதிய அரசு சிறப்பாக செயல்படுகிறது. எனவே அந்நாட்டுடனான தொடர்புகளை வலுப்படுத்த இதுவே சரியான தருணம் என்றும் கூறினார்.