நியூயார்க்: பூடானில் இருந்து நேபாளத்திற்கு அகதிகளாக வந்தவர்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.
அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத் தகவலின்படி, இவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்துள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக ஆஸ்ட்ரேலியா, நியூஸீலாந்து, நெதர்லாந்து, நார்வே, கனடா, டென்மார்க் ஆகிய நாடுகளில் அதிகப்படியான பூடான் அகதிகள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் வசித்து வரும் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பூடான் அகதிகளில், சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமனோர் அயல்நாடுகளுக்கு புலம்பெயர விருப்பம் தெரிவித்திருந்தனர் என்றும், இவர்களில் பலர் கடந்த 17 ஆண்டுகளாக அகதிகளாக நேபாளத்தில் வசிப்பவர்கள் என்றும் ஐ.நா. அகதிகள் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் வில்லியம் ஸ்பின்ட்லர் தெரிவித்துள்ளார்.
பூடான் அகதிகள் தாங்கள் விரும்பிய அயல்நாடுகளுக்கு புலம்பெயர்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி உள்ளிட்ட இதர சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டதாக ஸ்பின்ட்லர் கூறினார்.