நாளை என்.எஸ்.ஜி. நாடுகள் கூட்டம்: இந்தியாவிற்கு விலக்கு கிடைக்குமா?
புதன், 3 செப்டம்பர் 2008 (13:02 IST)
அணு சக்தித் தொழில்நுட்ப வணிகத்தில் இந்தியாவிற்கு விலக்குடன் கூடிய அனுமதி வழங்குவதில் சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இறுதி முடிவினை எடுப்பதற்காக அணு சக்தித் தொழில்நுட்ப நாடுகள் குழு (என்.எஸ்.ஜி.) நாளை கூடுகிறது.
அதைப் பரிசீலித்த நியூசிலாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் திருப்தியடையவில்லை என்றும், அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்பதில் அவை உறுதியாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள வரைவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மேம்போக்கானவை என்றும், தாங்கள் கூறிய நிபந்தனைகள் அதில் சேர்க்கப்படவில்லை என்றும் அவை கூறியுள்ளன.
சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது இதழில், அணு ஆயுதப் பரவல் தடை முயற்சிகளுக்கு இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் ஒரு தடைக்கல் என்று கூறியிருக்கிறது. இருந்தாலும், என்.எஸ்.ஜி.யில் இந்தியாவிற்கு ஆதரவளிக்கும் தனது முடிவில் மாற்றமில்லை என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வரைவில் ஏற்கெனவே உள்ளதைத் தவிர புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நாளை கூடி இரண்டு நாட்கள் நடக்கவுள்ள என்.எஸ்.ஜி. கூட்டத்தில், இந்தியாவிற்கு விலக்குடன் கூடிய அனுமதி கிடைக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.