பாகிஸ்தானில் இருந்து வெளியேற திட்டம்: முஷாரஃப் மறுப்பு!

புதன், 20 ஆகஸ்ட் 2008 (14:29 IST)
PTI PhotoFILE
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து நாட்டை விட்டும் வெளியேற தாம் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளில் ஆதாரமில்லை என பர்வேஸ் முஷாரஃப் மறுத்துள்ளார்.

ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தளபதிக்கான குடியிருப்பில் தற்போது தங்கியுள்ள முஷாரஃப், நேற்று தனக்கு நெருக்கமான முக்கிய பிரமுகர்களை சந்தித்துப் பேசியதாக பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் ஜியோ நியூஸ் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்போது, அதிபர் பதவியில் இருந்து விலகியதால் தாம் தோற்றுவிடவில்லை என்றும், நாட்டு மக்களின் நலன் கருதியே தாம் அதிபர் பதவியில் இருந்து விலகியதாகவும் முஷாரஃப் அவர்களிடம் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் விரைவில் தாம் மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் வசித்து வரும் தனது மகனுடன் தன் வாழ்நாளை கழிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படும் செய்திகள் ஆதாரமற்றது என்றும் முஷாரஃப் அப்போது கூறியுள்ளார்.

பதவி விலகுவதற்கு முன் நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது குறிப்பிட்டபடி, நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை விரைவில் வெளியிட முஷாரஃப் திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்காக இன்று (20ஆம் தேதி) சில அரசியல் தலைவர்களுடன் அவர் சந்திப்பு நடத்த உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்