உலகின் மற்றெந்த நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் சிறைக் கைதிகள் எண்ணிக்கை அதிகம் என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சுமார் 2.3 மில்லியன் (23 லட்சம்) பேர் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் உள்ளனர் என்று அமெரிக்க அரசு தரப்பு புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன என்று மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
1 லட்சம் பேர்களில் 762 பேர் சிறையில் உள்ளனர் என்று கூறியுள்ள அரசு தரப்பு புள்ளி விவரங்கள், பிரிட்டனில் லட்சத்தில் 152 பேர்கள்தான் சிறையில் உள்ளனர் என்று கூறுகிறது.
மனித உரிமை அமைப்பின் அமெரிக்க இயக்குனர் டேவிட் ஃபாத்தி, "இந்த புதிய புள்ளி விவரங்களின்படி சிறைக்கைதிகள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது என்பது உறுதியாகியுள்ளது" என்றார்.
பிற குடியரசு நாடுகளான கனடா, பிரிட்டன் உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அமெரிக்காவில் ஏன் அதிகம் பேர் சிறையில் அடைக்கப்படுகின்றனர் என்ற கேள்வியை அமெரிக்க மக்கள் எழுப்பவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதேபோல் சிறைக் கைதிகளில் உள்ள கறுப்பர்கள் எண்ணிக்கையை பார்க்கும்போது அமெரிக்காவின் நிற பேத நடைமுறைகள் கண் கூடாக தெரிகிறது என்று அவர் கூறினார்.
அதாவது 6 கறுப்பர்களுக்கு ஒரு வெள்ளையர் என்ற விகிதத்தில் கறுப்பர்கள் சிறையில் அடைக்கப்படுவதாக தெரிகிறது.
அமெரிக்க நீதித் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி மொத்த சிறைக் கைதிகளில் கறுப்பர்கள் எண்ணிக்கை 11 விழுகாடாக உள்ளது. அதுவும் இவர்களது வயது 30 முதல் 34 வரையே இருப்பதாக அந்த புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
வெள்ளையர்களைக் காட்டிலும், போதைப் பொருள் விவகாரத்தில் கறுப்பர்களே அதிகம் கைது செய்யப்படும் நிலை தொடர்கிறது. ஆனால் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் கறுப்பர்கள் மற்றும் வெள்ளையர்கள் சமமாகவே உள்ளனர் என்று மனித உரிமை கண்காணிப்பு கூறியுள்ளது.
போதை மருந்து வழக்கில் கைது செய்யப்படும் கறுப்பர்கள் அனைத்து மாநிலங்களிலும் சேர்த்து 54 சதவீதம் என்றும் மனித உரிமை கண்காணிப்பு கூறியுள்ளது.