மே 12ம் தேதி சீனாவின் சிச்சுவான் நகரில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இன்று குவிங்சுவான் நகருக்கு தெற்கே மீண்டும் ஒரு பலத்த பின்னதிர்வு ஏற்பட்டுள்ளது
ரிக்டர் அளவு கோலில் இது 5.3 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரம் காலை 10 மணியளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றிய உடனடி விவரங்கள் ஏதுமில்லை.
இதற்கிடையே பூகம்பத்தினால் உருவாகிய தாங்கியாஷன் ஏரி உடையும் அபாயம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஏரியிலிருந்து நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று துரிதமடையும் என்று தெரிகிறது.
வெள்ள அபாயம் சூழ்ந்துள்ள மியான்யாங் நகரில் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோருக்காக ஏற்படுத்தப்பட்ட முகாம்கள் காலியாக உள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு பெயர்ந்து வருகின்றனர்.
தொடர்ச்சியான மழையாலும், பின்னதிர்வுகள் ஏற்படுத்திய அலைகளாலும் வெள்ள அபாயம் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.