வவுனியாவில் கடும் மோதல்: 10 படையினர் பலி!
வியாழன், 5 ஜூன் 2008 (12:54 IST)
இலங்கை வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 10 படையினர் கொல்லப்பட்டதுடன் 18 படையினர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா மாவட்டம் பாலமொட்டையில் சிறிலங்கப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியைத் தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்ததாகவும், இதில் 10 படையினர் கொல்லப்பட்டதுடன் 18 படையினர் காயமடைந்ததாகவும் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மேற்கு பாலமொட்டையில் நேற்று புதன்கிழமை காலை 11 மணியளவில் இம்மோதல் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார் என்று புதினம் இணைய தளம் கூறுகிறது.
35 புலிகள் பலி: படைத்தரப்பு தகவல்!
இதற்கிடையில் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று புதன்கிழமை நடந்த கடுமையான மோதல்களில் விடுதலைப் புலிகள் 35 பேரும், படையினர் ஒருவர் மட்டும் கொல்லப்பட்டதாக சிறிலங்க ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடந்த கடும் மோதலில் விடுதலைப் புலிகள் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 5 படையினர் காயமடைந்ததாகவும், மன்னாரில் நடந்த கடும் மோதலில் விடுதலைப் புலிகள் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு படையினர் காயமடைந்ததாகவும், மற்ற இடங்களில் நடந்த மோதலில் விடுதலைப் புலிகள் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், படையினர் ஒருவர் மட்டும் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.