'எனது உயிருக்கு அச்சுறுத்தல்': தஸ்லிமா!
புதன், 4 ஜூன் 2008 (13:35 IST)
மத அடிப்படைவாதச் சக்திகளினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதையும் மீறித் தான் எழுதப்போவதாகவும் வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் வெளியேறிய பிறகு ஸ்வீடனில் வசித்து வரும் தஸ்லிமா, "எனது எழுத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத தீவிரவாதிகள் என்னைத் தாக்குவதன் மூலம் அவர்களுடைய அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள விரும்புகின்றனர்" என்றார்.
"சில தீவிரவாதிகள் எனது குரலை நசுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் நிச்சயமாகக் கடந்த கால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் ஃபாத்வாக்கள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்குப் பணிபவள் நான் அல்ல. இந்திய ஜனநாயகத்தின் மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன்.
ஹைதராபாத் பத்திரிகையாளர் அலுவலகத்தில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை என்னால் மறக்க முடியாது. அரைமணி நேரத்திற்கும் மேலாக நான் மரணத்திற்கு அருகில் இருந்தேன்.
எனது கவிதைகளையும், மனிதாபிமான விவாதங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாத சில மத அடிப்படைவாத சக்திகளால்தான் நான் கொல்லப்படுவேன் என்று நான் அஞ்சுகிறேன்" என்றார் அவர்.