அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஆறு தடைபட்டு உருவாகியுள்ள ஏரிகள் எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்பதால் அப்பகுதியில் வசிக்கும் 2 லட்சம் பேரைச் சீன அரசு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளது.
ஜியான்ஜியாங் ஆறு தடைபட்டு உருவாகியுள்ள தாங்ஜியாஷன் ஏரி எப்போது வேண்டுமானாலும் உடைந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் புகலாம் என்பதால், அதைச் செயற்கையாக உடைத்து ஆற்றின் வழித்தடத்தில் வெள்ளத்தைத் திருப்பிவிடும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
இருந்தாலும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக ஏரி உடைப்புப் பணிகள் தாமதமாகியுள்ளன. அதற்குள் ஏரி உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளது என்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
தாங்ஜியாஷன் ஏரிக்கு அருகில் உள்ள மியாங்யாங் மாகாணத்தில் வசிக்கும் மக்களை முழுமையாக வெளியேற்றும் பணிகள் நடந்து வருவதாகவும், இதுவரை 1,97,477 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாகவும் சீன அரசுச் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இதுதவிர தாங்ஜியாஷன் ஏரியைச் சுற்றிலும் உருவாகியுள்ள மேலும் 35 ஏரிகளை உடைக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த ஏரிகள் அமைந்துள்ள இடங்களுக்குச் செல்லச் சரியான சாலை வசதிகள் இல்லை என்பதால், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.