சர்வதேச அளவில் கடன் அட்டைகளை வைத்து மோசடி செய்யும் நடவடிக்கைகள் இந்தியாவில் அதிகம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.
சமீபமாக பிரிட்டன் பத்திரிகையாளர் ஒருவர் வங்கிக் கணக்கிலிருந்து சென்னையில் பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. போர்ன்மவுத்தில் சுமார் 500 பேர்களில் வங்கிக் கணக்குகளிலும் இது போன்ற மோசடி தொடர்ந்து நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
கடன் அட்டையை குளோன் செய்து கடன் அட்டை விவரங்களை மோசடிப் பேர்வழிகள் எடுத்து விடுகின்றனர். பெட்ரோல் நிலையங்களில் கடன் அட்டை அல்லது வங்கி அட்டையை கொடுத்து பெட்ரோல் நிரப்புவதால் ஏற்படும் மோசடிகள் அதிகம் என்று பிரிட்டன் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சூப்பர் மார்க்கெட்டுகளில் கடன் அட்டை மூலம் பொருட்கள் வாங்குவதாலும் இந்த மோசடிகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டில் பிரிட்டனைச் சேர்ந்த நபர்களின் கடன் அட்டைக் கணக்கிலிருந்து மும்பை, சென்னை, மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் ஏ.டி.எம். மூலமாக பணம் எடுக்கப்படுவது அதிகரித்துள்ளதாக பிரிட்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு இங்கிலாந்தில் உள்ள போர்ன்மவுத் என்ற இடத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரது வங்கிக் கணக்கிலிருந்து கடந்த சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய தினங்களில் சென்னையிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது வங்கி அவரிடம் தெரிவித்துள்ளது.
ஆனால் இது குறித்து பிரிட்டன் வர்த்தக கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரி மார்க் போவர்மேன் கூறுகையில், இது போன்ற மோசடியில் தங்களது பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களில் இல்லை என்றும் அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்ட்ரேலியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பட்டியலில் முன்னணி வகிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.